மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதை அடுத்து கப்பலூர் வழியாக அவனியாபுரம் விரைந்தார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ராகுல்காந்தி அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராகுலின் கார் நேராக மேடையின் பின்புறம் சென்றதை அடுத்து அந்த மேடையில், ராகுலுடன் கே.எஸ்.அழகிரி, கே.சி.வேனுகோபால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு மட்டும் அனுமதி தரப்பட்டது.
ஜல்லிக்கட்டை முதல்முறையாக நேரடியாக பார்த்ததால் மிகுந்த ஆர்வமுடன் கண்டு ரசிக்கத் தொடங்கினார் ராகுல். மாடு பிடி வீரர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த ராகுல், எவ்வாறு காளைகளை அவர்கள் லாவகமாக அடக்குகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்தார். இடையே வாடிவாசல் பகுதிக்கும் எழுந்து நடந்து சென்று காளைகள் அவிழ்த்துவிடப்படுவதை கண்டார்.
இந்நிலையில் ராகுல் காந்தி வருவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவனியாபுரம் வந்து ஜல்லிக்கட்டை கண்டு கொண்டிருந்தார். ராகுல்காந்தி மேடைக்கு வந்த பிறகு அவரது எதிர் மேடையில் நின்றிருந்த உதயநிதி ஸ்டாலினை ராகுல் காந்தியுடன் வந்து அமருமாறு விழா கமிட்டி சார்பில் மைக்கில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்த மூர்த்தி எம்.எல்.ஏ., அசன் முகமது ஜின்னா, உள்ளிட்டோர் ராகுல் காந்தி அமர்ந்திருந்த மேடையை நோக்கி சென்றனர்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூர்த்தி எம்எல்ஏ-வுக்கு மட்டும் மேடையில் அனுமதி வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலினை பார்த்தவுடன் எழுந்துநின்று வரவேற்ற ராகுல்காந்தி, ஸ்டாலின் பற்றி கேட்டறிந்தார். பிறகு, இருவரும் அவ்வப்போது உரையாடிக்கொண்டனர்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு 10க்கும் மேற்பட்ட தங்க மோதிரங்கள் மற்றும் தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சார்பில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக மட்டும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி மதுரை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.













