Home » ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டினர் – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பகீர் !

ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டினர் – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பகீர் !

0 comment

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு தனது வீட்டுக்கு நேரடியாக வந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுக்க வலதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு சென்று பணம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜெர்மனியில் ஹிட்லரின் நாசி கட்சி எப்படி அடக்குமுறைகளை கையாண்டதோ அதுபோல ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுகிறது. ராமர் கோவிலுக்கு நிதி வழங்காதவர்கள் வீடுகள் குறித்து வைக்கப்படுகின்றன. நிதி வழங்கியவர்களின் வீடுகள் வேறுமாதிரி குறித்து வைக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் ஏதோ நடக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பெரும் புயலை கிளப்பிய நிலையில் பெங்களூரில் இன்று நிருபர்களிடம் பேசிய குமாரசாமி மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்திருந்தனர். ராமர் கோவிலுக்கு நிதி வழங்க வேண்டும் என்று அவர்கள் அதிகார தோரணையில் கேட்டனர்.

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் விவகாரத்தில் எந்த மாதிரி வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது ? ஒவ்வொரு தெருவிலும் வலதுசாரிக் குழுக்கள் அவர்களாக வீடுகளுக்குச் சென்று நிதி திரட்டுகிறார்கள். இந்த பணம் எங்கே செல்கிறது. பணம் தராதவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப்போது நானே அவ்வாறு மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளேன்.

பணம் தரமுடியாது என்று சொன்னால், எதற்காக நீங்கள் தர மாட்டீர்கள் என்று மிரட்டும் தொனியில் அவர்கள் கேட்கிறார்கள். பணம் கேட்கும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்? விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டுக்குள் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நான் நிதி வழங்கப்போவது கிடையாது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடிவடைந்து இருக்கலாம். ஆனால் இன்னமும் சர்ச்சை தொடர்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்படும் கோவிலுக்கு பணம் கொடுக்கப்போவது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter