அதிரை மேலத்தெருவில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய இப்பள்ளியை தற்போது முன்னாள் மாணவர்கள் புனரமைத்தனர். கழிவறைக்கு டைல்ஸ், பி.வி.சி கதவு, பள்ளி வளாகத்தில் குடிநீர் அருந்தும் குழாய் மற்றும் அந்த இடத்திற்கு டைல்ஸ் போன்றவைகளையும், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தேவையான இன்னும் பிற ஏற்பாடுகளையும் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அந்த பள்ளிக்குள் இரவு நேரத்தில் நுழைந்த மர்மநபர்கள் கழிவறை கதவுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் தண்ணீர் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மாலை நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்துதலும் தொடர் கதையாக உள்ளது. இந்த சூழலில் ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட பணிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கி இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஊரின் மைய பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு காலமே பதில் சொல்லும்.

