இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89.
உடல் நலக்குறைவு காரணமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார் தா.பாண்டியன். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சிறுநீரக தொற்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு 10 மணி நிலவரப்படி தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 26ம் தேதியான இன்று காலை, தா.பாண்டியன் காலமானார். இதை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
தா.பாண்டியன் தமிழகம் கண்ட மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். கம்யூனிச சித்தாந்தங்களில் மாறாத பற்று கொண்டவர்.
1989 முதல் 1996 வரை இருமுறை லோக்சபா உறுப்பினராக பதவி வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக 2005 முதல் 2015 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே, தமிழகம் கண்ட மிகச்சிறந்த பொதுவுடைமைவாதிகளில் ஒருவர் தா.பாண்டியன் என்று அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.