தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மமக-விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக குழுவினர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கையெழுத்திட்டார்.
மேலும் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஓரிரு நாட்களில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.