தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிக வேகமாக நடந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் உடன் திமுக தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட தொகுதிகள் கேட்க, திமுக அதற்கு உடன்பட மறுத்ததால் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்தது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட்-திமுக இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த தொகுதி பங்கீட்டு பிறகு பேசிய இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தொகுதி எண்ணிக்கையா, லட்சியமா என்று பார்த்தால், தொகுதி எண்ணிக்கையை விட லட்சியத்திற்குத்தான் முதலிடம். திமுக கூட்டணியுடன் இணக்கமான முறையில் ஒப்பந்தம் முடிந்துள்ளது. தமிழகத்தில் சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி வகுப்புவாத சக்திகள் காலூன்ற முயற்சி செய்து வருகின்றன. திமுக கூட்டணி இதனை தடுத்து நிறுத்தும் என்று முத்தரசன் கூறினார்.



