2011 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது.
ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. படுதோல்வி அடைந்தது. கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றது. இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், ஆரம்பம் முதலே தே.மு.தி.க. அதிருப்தியில் இருந்து வந்தது. பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக, அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. இது தே.மு.தி.க.வை எரிச்சலடைய வைத்தது. பாமகவை விட தங்களுக்கு கூடுதல் இடம் அளிக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியது.
ஆனால், அதை அ.தி.மு.க. பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில், 41 தொகுதிகளை தேமுதிக கேட்க, அதிமுக தரப்பில் 28 தொகுதிகள் ஆஃபர் கொடுக்கப்பட்டது. ஆனால், தேமுதிக அதற்கு சைலண்ட்டாக இருந்தது.
அதன்பிறகு அதிமுக 28 தொகுதிகள் என்பதையும் குறைக்க, தேமுதிக 25 தொகுதிகள் வரை இறங்கியது. ஒருக்கட்டத்தில் அதிமுக 15, 13 என்று தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே செல்ல, தேமுதிக அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? என்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை இன்று அவசர ஆலோசனை நடத்தியது. முடிவில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக கேட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் அதிமுக ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அமுதிக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
