Home » மநீமவுடன் கூட்டணி இல்லாதது ஏன்? – SDPI விளக்கம் !

மநீமவுடன் கூட்டணி இல்லாதது ஏன்? – SDPI விளக்கம் !

0 comment

மக்கள் நீதி மய்யத்தில் தர முன் வந்த 18 தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அமமுகவில் ஆறு சீட்டுகளுக்கு ஒத்துக் கொண்டது ஏன் என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் கூறியதாவது :

அவர்கள் 18 தொகுதிகள் தர முன் வந்தது உண்மை தான்! ஆனால், நாங்கள் தான் தவிர்த்துவிட்டோம்! காரணம், அங்கே நாங்கள் சென்ற போது ஒரு கட்சி அமைப்புக்கான அட்மாஸ்பியரே அங்கு இல்லை! ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தினரின் அணுகுமுறையே அவர்களிடம் பக்காவாக வெளிப்பட்டது.

தேர்தல் கூட்டணி பகிர்வு என்பதை கட்சிகளோடு தான் வைத்துக் கொள்ள முடியும்! ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் போது அந்த உணர்வுபூர்வமான பிணைப்பை நாம் எதிர்பார்க்க முடியாது! எல்லாமே மேல்மட்ட அணுகுமுறையாக இருந்தது! வெளிப்படைத் தன்மையும் இல்லை, எந்த ஒரு விஷயத்திலும் திட்டவட்டமான கருத்தும் இல்லை.

அவர்கள் தந்த 18 தொகுதிகளில் அவங்க கட்சி கட்டமைப்பை விசாரித்து பார்த்த போது தான் தெரிந்தது, அவங்களுக்கு அங்கேயெல்லாம் அமைப்பே இல்லை. அப்ப யாரோட கைகோர்த்து தேர்தல் வேலை செய்வது..? மாவட்டம், ஒன்றியம், கிளைகள், அந்தந்த பகுதி நிர்வாகிகள் என்ற முறையான கட்டமைப்பு அவங்களிடம் இல்லை. நகர் பகுதிகளில் ஒரளவு இருக்கு என்றாலும், அதுவும் கூட அங்குமிங்குமாக இருக்கு தானே தவிர முழுமையாக இல்லை. கிராமங்களிலோ சுத்தமாகக் கிடையாது! கமலஹாசன் என்ற ஒற்றை பிம்பத்தைக் கொண்டு ஓட்டு பெற்றால் போதும் என்ற நிலையில் தான் அந்த இயக்கம் இருக்கு.

கட்சி கட்டமைப்பு இல்லாதவர்களோடு சேர்ந்து என்ன வேலை பார்க்க முடியும்னு யோசிக்க வேண்டியதாயிடுச்சு! பேருக்கு நாங்களும் ஒரு இஸ்லாமிய இயக்கத்தை வச்சுருக்கோம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வதற்கான வாய்ப்பாக எங்கள் இருப்பை கருதினார்களே அன்றி ஒரு டீம் ஸ்பிரிட்டை அங்க பெற முடியலை. நாங்கள் ஒரு வலுவான இயக்கம், எங்கள் தொண்டர்கள் உறுதியானவர்கள், அடித்தளம் வரை இறங்கி கள வேலைகளை சளைக்காமல் செய்யக் கூடியவர்கள்! அதற்கான தோழமை அமையாத இடத்தில் இருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது.

ஆரம்பம் முதல் பேச்சுவார்த்தையில் அவங்க தருகிற தொகுதிகளில் எங்களை நிற்க வைக்க முயற்சித்தார்களே தவிர, நாங்கள் பலமாக இருக்கும் இடங்களை தர மறுத்து வந்தார்கள்! ஆகவே, எங்கள் வாக்கு வங்கியை அங்கே தூக்கி கொடுத்துவிட்டு வர எங்களுக்கு விருப்பமில்லை. அமமுகவை பொறுத்த வரை, அவங்களுக்கு எல்லா இடத்திலும் நிர்வாகிகள் உண்டு.தொண்டர்கள் உண்டு. அதுவும் குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானைப் போல அன்னியோன்னியமாக பழகக் கூடிய இயல்பை கொண்டவர்கள். அதனால், நாங்கள் மக்கள் நீதி மய்யத்தை தவிர்த்துவிட்டோம்’’ என்றனர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter