Home » முட்டி மோதும் திமுக-தமாகா : பட்டுக்கோட்டை யாருக்கு ?

முட்டி மோதும் திமுக-தமாகா : பட்டுக்கோட்டை யாருக்கு ?

by
0 comment

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டையில் திமுக, தமாகா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. என்னது, தமிழ் மாநில காங்கிரஸா என்று ஜெர்க் ஆகக் கூடாது. சாட்சாத் தமாகா-வே தான். திமுகவுக்கு இங்கு கடும் சோதனை காத்திருக்கிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இன்று தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று, ‘இது வேட்பாளர்கள் பட்டியல் அல்ல; திமுக வெற்றியாளர்கள் பட்டியல்’ என்றார்.

அவ்வளவு கான்ஃபிடன்ஸோடு பேசிய ஸ்டாலினுக்கே கிலி ஏற்படுத்தக் கூடிய தொகுதியாக பட்டுக்கோட்டை உள்ளது.

இங்கு திமுக சார்பில் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கே.அண்ணாதுரை. பழுத்த திமுக விசுவாசி. பிரஷாந்த் கிஷோரின் ‘சீனியர்களுக்கு சீட் அதிகம் வேண்டாம்’ என்ற ஃபார்முலாவுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். 1989ம் ஆண்டு, பட்டுக்கோட்டையில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர். ஆனால், அதன் பிறகு தேர்தலில் நிற்க பெரிதாக இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தலைமையிடம் இவர் சீட்டும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட 32 வருடங்கள் கழித்து இப்போது தான் முதன் முறையாக பட்டுக்கோட்டையில் மீண்டும் தேர்தல் களம் காண்கிறார்.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியிலும், கட்சியிலும் இவருக்கு நல்ல பெயர் உள்ளது. அங்கு தேவர் சமூகம் பரவலாக இருந்தாலும், அவர்களை விட ஒருபடி மேலாக இருப்பது வேளாளர் சமூகத்தினர் தான். இவரும் வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர். அந்த வகையில், ஜாதி ஓட்டுகளும் இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளன. அரசியலில் பெரிதாக சொத்தும் சேர்க்காத அண்ணாதுரை, இந்த தேர்தலுக்கே எப்படி செலவு செய்வார் என்று தெரியவில்லை என்று பட்டுக்கோட்டை நகர திமுகவினரே முணுமுணுக்கின்றனர்.

அதேசமயம், அண்ணாதுரைக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் களமிறங்குபவர் என்.ஆர்.ரங்கராஜன். 2001 முதல் 2011 வரை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த இந்த ரங்கராஜன் தான் ஜி.கே.வானின் ‘ரைட் ஹேண்ட்’. மறைந்த மூப்பனாருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் இவர். தேவர் இனத்தைச் சேர்ந்த ரங்கராஜனுக்கு மட்டுமல்லாது, இவரது குடும்பத்துக்கும் பட்டுக்கோட்டையில் செல்வாக்கு உள்ளது. அண்ணாதுரையைப் போல மக்களிடம் நல்ல பெயரும் உள்ளது.

பட்டுக்கோட்டை நகரத்தில் இயங்கும் பல கடைகள் இவருடையது தான். வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால், வெறும் 200, 300 என்பதே இவர் வசூலிக்கும் வாடகைத் தொகை. அடாவடி, ஆர்ப்பாட்டம், கட்டப் பஞ்சாயத்து இல்லாத அரசியல்வாதியாக பட்டுக்கோட்டையில் வலம் வருகிறார். பினாமி பெயரில் பேருந்து, தஞ்சையில் பல இடங்கள் என்று இவரது சொத்து, செல்வாக்கு ஏராளம். அடிப்படையில் இவர்கள் மைனர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சையின் மிக ‘காஸ்ட்லி’ நகரான அருளானந்தம் நகரில் கணக்கிட முடியாத அளவுக்கு இவருக்கு நிலங்கள் உள்ளன. எனினும், ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியல்வாதி என்பதால், மக்கள் இவரையும் ஆதரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter