இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை விரோத நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
“நம்முடைய தொடக்க காலங்களில் எந்த முஸ்ஸிம் பெண்களும் புர்கா அணியவில்லை. இந்த மத அடிப்படைவாதம் அண்மையில் தான் தோன்றியது. நாங்கள் இதை நிச்சயமாக தடை செய்வோம்” என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மதரஸாக்கள் மூடப்படும். இது தேசிய கல்விக்கொள்கையை மீறுவதாக இருக்கிறது” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களை புதைக்ககூடாது, எரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு கட்டாயப்படுத்தியது. இதையடுத்து, ஐ.நா மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தொடர் அழுத்ததால் அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிரான அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.