9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட வகுப்பு பயிலும் மாணவர்கள் விருப்பப்பட்டால், பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே 9, 10 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தலைதூக்க தொடங்கியுள்ளது. ஒரு சில பள்ளிகளிலும் ஏராளமான மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என்றும், ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.