Home » தஞ்சை பள்ளி, கல்லூரிகளை துரத்தும் கொரோனா!

தஞ்சை பள்ளி, கல்லூரிகளை துரத்தும் கொரோனா!

by
0 comment

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 69-ஆக உயர்ந்தது.

இதேப்போல் பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் நடத்திய பரிசோதனையில் நேற்று 4 ஆசிரியர்-ஆசிரியைகள், 1 மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கும்பகோணத்தில் 2 பள்ளிகளில் 3 ஆசிரியர்கள், 7 மாணவ-மாணவிகளுக்கும் பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் இன்று வந்த பரிசோதனை முடிவுகளில் தஞ்சை தனியார் பள்ளியில் புதிதாக 21 மாணவ-மாணவிகள், மகளிர் பள்ளியில் 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதேப்போல் தஞ்சை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 7 பள்ளிகள் மற்றும் 1 பல்கலைக்கழகத்தில் 97 மாணவ-மாணவிகள், 8 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 115-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பரிசோதனை செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்குமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

தொடர்ந்து பள்ளியில் பரவி வந்த கொரோனா தற்போது பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை தொடர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வேகம் உச்சத்தில் உள்ளது. இதற்கு முன் பொதுமக்களை தாக்கிய கொரோனா தற்போது மாணவர்களை தாக்கி வருகிறது.

இதனால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பெற்றோர்கள் பலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. பாதிக்கப்பட்ட பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது, மற்ற பள்ளிகளில் வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதார துறையினர், மருத்துவ பணியாளர்கள் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூட வேண்டும். பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். கொரோனா முற்றிலும் குறைந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter