தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 142 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா பரவலை கண்காணிக்க 14 குழுக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத இரண்டு பள்ளிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.12,000மும், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5,000 அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலட்சியத்துடன் செயல்பட்டதாக இரண்டு பள்ளிகள் மீதும் அபராதம் மற்றும் வழக்குப்பதிவு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.