தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, அரசியல் கட்சியினர் சுழன்று சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நட்சத்திர தலைவர்கள் பலர் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் உவைசி, பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்தை ஆதரித்து அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், பாசிசத்தை எதிர்க்கும் வல்லமை TTV. தினகரனுக்கு உண்டு என்றும், திமுக பாசிஸவாதிகளுடன் மென்மை போக்கை கையாளுவதாகவும், பெரியாரின் திராவிட மண்ணாக இருக்கும் தமிழகத்தில் மதவாத சக்திகளை ஊக்குவிக்கும்படி திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் EPS, OPS வகையறாக்கள் ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், அடுத்து தமிழகத்தை நல்லதலைவரிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது, அதற்கு தகுதியான தலைவர் TTV. தினகரன் தான் என்றார்.
இறுதியாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி குறித்து பேசிய அவர், இத்தொழிற்சாலையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நாசகார திட்டங்களுடன் வரும் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வம், அமமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




















