காதல் திருமணம் செய்துகொண்டு மதம் மாறிய கேரளப் பெண் ஹதியா தனது ஹோமியோபதி படிப்பைத் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற இந்துப் பெண், சபீன் ஜஹான் என்ற முஸ்லீம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்துகொண்டார். இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது லவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சபீன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஆஜரான ஹதியா கணவருடன் வாழ விரும்புவதாகவும், தனது ஹோமியோபதி படிப்பைத் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹதியாவை விடுவித்து, அவரைத் தொடர்ந்து படிக்க அனுமதியளித்தனர்.
இதனையடுத்து, கேரள போலீஸார் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்த சேலத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போது ஒப்படைத்தனர். அங்கு அவர் சக மாணவிகளுடன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கல்லூரியில் அவருக்குப் பாதுகாப்பாளராக கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கல்லூரியில் முதல்வர் தெரிவிக்கையில், ஹதியாவிற்கு கல்லூரியில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.