கன்னியாக்குமரி அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாலு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் 210 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை கொட்டி வருகிறது. இதே போன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதையடுத்து விருதுநகர், கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களிவ் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னையில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மீனம்பாக்கம் , வட பழனி உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளில் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் 210 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அடுத்த 36 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் , . புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.