பசுமை புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மை விட்டு அதிகமான தூரத்திற்குச் சென்றுவிட்டது. ஓடும் நீரை தடுத்துநிறுத்தி அணைக்கட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்கள் இன்று புழுங்கல் அரிசிக்கும், பச்சை அரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் பெருகி வரும் நோய்களும் அதற்குக் காரணமாக விளங்கி வரும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளும் நஞ்சான உணவையே மக்களுக்குக் கொடுக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. இவ்விரண்டையும் தவிர்க்க நினைப்பவர்களுக்கு வரமாக உள்ளதுதான் மாடித்தோட்டம் என்னும் நவீன இயற்கை விவசாயம்.
பொதுவாகவே இயற்கையான காய்கறிகளைத்தான் நாம் உண்ண வேண்டும். அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று இயற்கை விவசாயம் செய்வது. இரண்டாவது, இயற்கை விவசாயப் பொருட்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறுவது. மூன்றாவது, மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்வது. மேற்கண்ட வழிகளில் தற்போது எல்லோருக்கும் ஏற்ற மற்றும் பெரும்பாலானோர் இறுதி வழியான மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பையே பின்பற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஓர் பசுமை புரட்சியாக மாடித்தோட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் வளர்ப்பு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அஹ்லன் கலீஃபா. இவருடைய வீட்டு மாடியில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மாடித்தோட்ட இயற்கை விவசாயம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள மாடித்தோட்டத்தில், பழவகைகளான சப்போட்டா, சாத்துக்குடி, ஆப்பிள், அத்திப்பழம்; காய்கனி வகைகளான தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, மாங்காய், இலந்தைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், முருங்கைக்காய்; ரோஜா, மல்லிகைப்பூ போன்ற பூ வகைகள்; சிறுகீரை, பெறுகீரை, கொத்தமல்லி போன்ற கீரை வகைகள்; துளசி போன்ற மருத்துவ குணமுள்ள செடிகள் போன்றவைகள் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்களே உற்பத்தி செய்து, உபயோகித்து வருகின்றனர். இவர்களைப் பின்பற்றி அப்பகுதியில் உள்ள பக்கத்துவீட்டார்களும் தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தயாராகி வருகின்றனர்.
இந்த மாடித்தோட்டம் திட்டத்தின் மூலம் நமக்கான உணவு வகைகளை நாமே தயாரித்து கொள்ளலாம். யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இம்மாடித்தோட்டத்தின் மூலம் மனஅமைதி ஏற்படும். உடல் பருமன் குறையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் உபயோகத்தில் இருந்து விடுபட்டு, இயற்கை முறையில் எந்த ரசாயனமும் இன்றி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை நாம் பெறலாம். இதற்கான உரங்களையும் நாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இவர்களைப் போன்ற அனுபவம் கொண்ட பெண்களை கொண்டு, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாடித்தோட்டம் குறித்த பயிற்சி அளிக்க இருக்கிறோம் என தெரிவிக்கிறார் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் வ. விவேகானந்தம். அதிராம்பட்டினத்தில் மாடித்தோட்டம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்கள் உள்ளோர், கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வ. விவேகானந்தம்
9442318881
அஹ்லன் கலீஃபா
9500392301
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே. நம் உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் கொடுத்து நம்முடைய ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் மரம், செடி, கொடிகளுடன் மாடித்தோட்டம் அமைத்து வாழ்வோம், வளமாக!
மாடித்தோட்ட படங்கள் :