நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,50,000-ஐ கடந்து உச்சம் தொட்டு வருகின்றன கொரோனா தொற்று இரண்டாவது அலை முதல் அலையை விட மோசமாக உள்ளது என்றும் இது மிகவும் கவலை அளிக்கும் அம்சம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிராவில்தான் கொரோனா தொற்று மிக மிக அதிகமாக உள்ளது.
தினமும் 50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மாநிலத்தின் மும்பை, புனே போன்ற நகரங்களில் தினசரி பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் முழு உரடங்குக்கு இணையாக நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களிடம் உரையாற்றும்போது கூறியதாவது:- மகாராஷ்டிரா முழுவதும் நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதை நான் முழு ஊரடங்கு என்று சொல்ல மாட்டேன். ஆனால் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.
இந்த நாட்களில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மட்டுமே இயங்கும். உள்ளூர் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கும். தேவையில்லாத பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பெட்ரோல் பங்குகள், செபியுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான நிறுவனங்கள் ஹோட்டல் / உணவகங்கள், வீட்டு விநியோக உணவு நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தனியார் பயிற்சி வகுப்புகள், முடிதிருத்தும் கடைகள், ஸ்பாக்கள், வரவேற்புரைகள் மற்றும் பியூட்டி பார்லஸ் ஆகியவை நாளை முதல் மே 1 ஆம் தேதி காலை 7 மணி வரை மூடப்படும். சினிமா அரங்குகள், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள் மூடப்பட உள்ளன. திரைப்படங்கள், சீரியல் தொடர்பான படப்பிடிப்புகள் என அத்தியாவசிய சேவைகளைச் செய்யாத அனைத்து கடைகள், மால்கள், ஷாப்பிங் சென்டர்கள் நாளை இரவு 8 மணி முதல் மே 1 ஆம் தேதி வரை மூடப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.