நேற்று வெளியிடப்பட்ட உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, தமிழ் நாட்டில் மணல் குவாரிகள், கல் குவாரிகள் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக மூடப்படவேண்டும். நம் மாநிலத்தில் மணல் தேவைக்கு மலேஷியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், புதியதாக தமிழகத்தில் மணல் மற்றும் கல் குவாரிகள் திறக்க கூடாது என்றும் கண்டிப்பான நீதி மன்ற உத்தரவின் மூலம், நம் தமிழகத்தில் நீதி விழித்துக்கொண்டது…நீதி நிலை நாட்ட பட்டிருக்கிறது என்று நாட்டு நலனில் அக்கறை கொண்ட பல அமைப்புகளாலும், பொது மக்களாலும் பாராட்டப்படுகிறது.
இயற்கை தாய் நமக்கு கொடுத்த வளங்கள்… மண் வளம், மலை வளம், நீர் வளம், தாவர வளம். இந்த வளங்கள் நமது வாழ்வாதார தேவைக்காக இயற்கையால் அருளப்பட்ட அளவிடமுடியா செல்வம். அதை போன்று நீரின்றி அமையாது உலகு.. போன்ற வள்ளுவ பெருந்தகையின் கூற்று எக்காலத்திற்கும் மறுப்பதற்கில்லை. எனவே தான் இயற்கையை நாம் போற்றி பாதுகாத்து வாழும் வாழ்க்கை வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்வாகும். இயற்கை நம்மை தாய் போன்று மடியில் வைத்து காக்கும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகும்.
உயர்நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பின் மூலம், மண்ணுக்கான, மனிதனுக்கான நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் அனைவராலும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக கருதப்பட்டு போற்ற படுகிறது.