Home » “சங்கிலியால் கட்டுவதா ? சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்குக” – பினராயி விஜயன், ராகுல் காந்தி கோரிக்கை!

“சங்கிலியால் கட்டுவதா ? சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்குக” – பினராயி விஜயன், ராகுல் காந்தி கோரிக்கை!

0 comment

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றார் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன். அப்போது உ.பி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சித்திக் காப்பான் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஏப்ரல் 21-ம் தேதி மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சித்திக் காப்பானின் மனைவி ரைஹாந்த் காப்பான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உ.பி. காவல்துறையினர், சித்திக் காப்பானை கடும் சித்திரவதைக்குள்ளாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், தனது கணவரை மருத்துவமனைக் கட்டிலில் ஒரு மிருகத்தைப் போல் கட்டி வைத்துள்ளதாகவும் இதனால் சித்திக் கடந்த 4 நாட்களாக உணவருந்தவோ கழிப்பறைக்குச் செல்லவோ இயலாத நிலையில் உள்ளதாகவும் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சித்திக் காப்பான் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “சித்திக் காப்பனுக்கு நீரிழிவு நோயும் இதயக் கோளாறுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் கொரோனா தொற்றுக்கு ஆளான பிறகு, மதுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கும் நிலையிலும்கூட, அவர் கட்டிலுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவரை உயிர் காக்கும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், சித்திக் காப்பானை கொடுமை செய்யும் உ.பி அரசைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சித்திக் காப்பானின் குடும்பத்திற்கு எனது ஆதரவை வழங்குகிறேன். அவருக்கு முழு பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி வழங்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் அவரை ஒடுக்குவதன் மூலம் தங்களின் தைரியமின்மையைக் காட்டுகின்றன! குற்றச் சம்பவங்களை நிறுத்துங்கள், செய்தி சேகரிப்பவர்களை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter