தமது போன் நம்பரை பாஜக உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும் நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார்
சமீப காலமாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், அதை சற்று காட்டமாகவும், எடுத்துரைத்து வருபவர் நடிகர் சித்தார்த். தென்னிந்திய நடிகர் என்றாலும், சித்தார்த் என்றால் வடமாநிலங்களிலும் அறியப்படுபவர்தான்.
அப்படியே யாராவது அறியாவிட்டாலும், இவரது ட்வீட்கள் இவர் யாரென்று பளிச்சென தெரிய வைத்துவிடும். எதற்கும் பயப்படாமல், யாருக்கும் தலைவணங்காமல், துணிந்து கருத்து சொல்பவர்களில் சித்தார்த்தும் ஒருவர்.
அதிலும் பாஜகவுக்கு எதிரான ட்வீட்களையே இவர் அதிகம் பதிவிடுவார்.. கிட்டத்தட்ட பிரகாஷ்ராஜ் மாதிரி என்றே சொல்லலாம். தற்போது கொரோனா உட்பட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு சுதாரிக்க தவறிவிட்டதால் நாட்டு மக்களின் அதிருப்தியை நேரடியாகவே பெற்று வருகிறது. இதைதான் சித்தார்த்தும் சற்று காட்டமாக ட்வீட் போட்டு வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் பதிவிட்ட ஒருசில ட்வீட்கள், பாஜக தரப்பை டென்ஷன் ஆக்கி விட்டது. குறிப்பாக, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த கருத்தை கண்டித்து “பொய் சொன்னால் ஓங்கி அறை விழும்” என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனையும், அந்த ட்விட்டரில் டேக் செய்து அவரை ‘கொரோனாவின் கூட்டாளி’ என்று சித்தார்த் விமர்சித்திருந்தார்.
சித்தார்த்தின் இந்த ட்வீட் பெரும் வைரலாகி, இருவேறு விமர்சனங்களை தாங்கி வந்தது.. பல தரப்பிலும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பின. சரியான நெத்தியடி பதில் என்று பலர் பாராட்டினர்.
இந்நிலையில், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாக சித்தார்த் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னுடைய போன் நம்பர் எப்படியோ, பாஜக உறுப்பினர்களிடம் லீக் ஆகிவிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்டவர்களின் ஐடிக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், என்ன ஆனாலும் சரி, இனிமேல் தன் வாயை மூட போவதில்லை, முயற்சி பண்ணி பாருங்கள் என்றும் குறிப்பிட்டு மறுபடியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.