வருடங்கள் கடந்து மீண்டும் இந்த கட்டுரையின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஸலாத்தினையும் எனது உள்ளத்திலிருந்து உரித்தாக்குகிறேன்.. வாங்க கட்டுரைக்கு போவோம்..
ஒருவர் ஆடம்பரமான, எல்லா வசதிகளும் உள்ள மாளிகையில் அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும் கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவருக்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும். டைபாயிடு,மலேரியா,டெங்கு காய்ச்சல் , இப்போது கொரோனா என்று பலவித தொற்று நோய் ஏற்படும் ஆரோக்கியத்தை இழந்து மருத்துவமனைகளில் காலம் கழிக்கும் நிலை வீட்டில் உள்ளவருக்கு ஏற்படும்.
மற்றொருவர்,போதிய வசதி இல்லாத, ஆனால் சுற்றிலும் பூந்தோட்டம் உள்ள குடிசையில் வசிக்கிறார். அவரது நிலை எப்படி இருக்கும்? உடல்நலத்துடன் அமைதியான மன நிலையுடன் அவர் சந்தோசமாக இருப்பார். முன்னவர், சுற்று சூழ்நிலைபற்றிய அக்கறை இல்லாதவர். தான் வசதியுடன் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர். பின்னவர் தனது வசதிகளை பெரிதாக கருதாதவர் , சுற்றுசூழ்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்.
நமது மக்களில் பலர் இப்போது, நாம் சொன்ன அந்த முன்னவரைபோல தான். தனது என்ற குறுகிய வட்டத்தை போட்டுக் கொண்டு எவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நாம் நன்றாக இருக்கிறோமா? அதுபோதும்! என்றசுயநலத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். தன்னை சுற்றியுள்ள சக மனிதனின் பிரச்சனை என்ன? சமுகத்தில் நிலவும் அவலங்கள் என்ன? என்பதைப்பற்றி கவலை இன்றி இருப்பது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் துன்பம் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். இல்லையெனில் நமது சுயநல எண்ணமே நமக்கு தீமையை தேடித்தரும் என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
தன்னை சுற்றியுள்ள சமுகத்தை புறக்கணிக்கும் எவரும் சிறந்து வாழ்ந்தவர்களாக இவ்வையகம் மதித்ததில்லை என்பதை எந்த வரலாறும் சொல்லவும் இல்லை.
” பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.”
வள்ளுவர் பிறந்ததற்கு, நல்லதாக எதாவது சொல்ல வேண்டுமே என்று இதுபோல பல விஷயங்களை சொல்லிவிட்டு போய்விட்டார். நாம்தான் அதனை பின்பற்றுவது இல்லை. வள்ளுவர் இப்படி எதோ நல்லது சொல்லிவிட்டு போனாலும் அதை கூட கேட்காத மக்கள் நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? இருந்தும் சில நேரத்தில் மனது கிடந்து தவிக்கும்…
சொல்லித்தான் பார்ப்போமே, ஊதுற சங்கை ஊதித்தான் பார்ப்போமே என்று நினைக்கும் அப்படியான நினைப்பு இன்று.! அதன் எதிரொலி தான் எனது இந்த சிறு கட்டுரை பதிவு..
இறைவன் நாடினால், வேறொரு தலைப்பில் உங்களை சந்திக்கிறேன்..

ஆக்கம்,
S.அப்துல் வஹாப் BBA.,
பொறுப்பாசிரியர் (அதிரை எக்ஸ்பிரஸ்)