சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார் பினராயி விஜயன். ‘ஐந்து வருட ஆட்சிக்கு பின்னர், அதே அரசியல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு கைப்பற்றப்போகிறது’ என்ற ஒரு வரலாற்று தருணத்தை கேரளா காணப்போகிறது. கேரளாவில் எந்த முதல்வரும், ஏன் எந்த மார்க்சிஸ்ட் முதல்வர்களும் செய்யாத இந்த சாதனையை பினராயி விஜயன் செய்ய இருக்கிறார். இந்தத் தேர்தலின் முடிவை கம்யூனிசத் தலைவர் பினராயி விஜயனின் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும்.
பினராயி விஜயன் யார்?
கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற ஊரில் 1945-ல் பிறந்தார் விஜயன். பெயருக்கு முன்போ அல்லது பின்போ தங்களின் பிறந்த ஊரைச் சேர்த்துக்கொள்வது கேரள மக்களின் வழக்கம். அப்படித்தான், விஜயன் என்ற பெயருக்கு முன்பு `பினராயி’ என்ற அவரின் ஊர்ப் பெயரும் ஒட்டிக்கொண்டது.
சிறுவயதாக இருந்தபோதே தந்தையின் மரணம் காரணமாக, குடும்பத்தின் பொறுப்பை பினராயி விஜயனின் தாய் கல்யாணி ஏற்கவேண்டியிருந்தது. பினராயி தான் அந்த குடும்பத்தின் இளையவர். சிறுவயது முதலே வாசிப்பில் அதிக நாட்டம் கொண்டவர். அதுவே அவரை அரசியலில் நுழைய அடித்தளம் அமைத்தது. அவரின் அம்மாவும், வாசிப்பும் தான் சிறுவயதிலேயே அவரை மார்க்சியத்தில் நாட்டம் கொள்ள வைத்து அரசியலுக்குள் நுழைத்தது.
அதன்படியே, கல்லூரிக் காலத்திலேயே கேரள மாணவர் சங்கத்தின் துடிப்புமிகு இளைஞராக கையில் செங்கொடி ஏந்திய ஒரு மனிதர் பினராயி விஜயன். மாணவர் பருவத்திலேயே அரசியல் அதிகளவு தீவிரம் கொண்டவர். இதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்குகிறோம். கண்ணூர் மாவட்டம் பினராயி விஜயனின் சொந்த மாவட்டம். கேரளாவின் பீகார் என அழைக்கப்படும் இந்த கண்ணூரில் சாதிக் கலவரம், மதக் கலவரம், அரசியல் கொலைகள் என்பதெல்லாம் சர்வ சாதாரணம். இந்து – முஸ்லிம் மோதல், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபடுவது இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
1967-71ல் இதேபோன்று ஒரு மத கலவரம் உருவாக வேண்டியது. தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லிம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை ஊர்முழுக்க பரவ கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடபட்டது. அப்போது சிபிஎம் கிளை செயலாளராக இருந்த பினராயி விஜயன் ஒரு ஆட்டோவை பிடித்து ஊர் ஊராக மைக்கில் இந்த புரளியை நம்பவேண்டாம், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார். எனினும், முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
அப்போது இஸ்லாமிய மசூதிகள் மீது சேதப்படுத்துவதை தடுக்க இரண்டு பேர் வீதம் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லா பள்ளிகளிலும் காவல் இருந்தனர். ஒரு மசூதியில் காவலில் இருந்த இருவர் இரவில் சற்று கண் அயர்ந்தபோது இருட்டில் மறைந்து வீச்சருவாளுடன் வந்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இருவரையும் வெட்டி சாய்த்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் போக, மற்றொருவரின் உடல் முழுக்க வெட்டப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்தும் உயிர் மட்டும் இருந்தது. ஆம், அன்று உயிர் போய் வந்த அந்த இளைஞர்தான் இன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்த அளவுக்கு அரசியல் மீதும் மக்கள் நலன் மீதும் பினராயி விஜயன் அக்கறை கொண்டிருந்தார்.
கொண்டிருந்த கொள்கையின் பிடிப்பு காரணமாக மாணவர் சங்கப் பொறுப்பாளராக இருந்த அவர் விரைவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையை நோக்கி உயர்ந்தார். கல்லூரி அரசியலுக்கு பின் நேரடி அரசியலில் நுழைந்தார். அவர் அரசியலில் நுழைந்த போது தலசேரியில் சிபிஎம் பலவீனமடைந்திருந்தது. அப்போது, தலசேரி தொகுதிக் குழு செயலாளர் பதவியை அப்போதைய சிபிஎம் மாநிலச் செயலாளர் சிஎச் கனரன் நேரடியாக பினராயிக்கு வழங்கினார். இந்த நியமனத்துக்கு பின் அடுத்து நடந்தது தலசேரியின் நவீன அரசியல் வரலாறு மற்றும் தலைவர் பினராயி விஜயனின் எழுச்சி.
தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரமாக உழைத்தார். முதன் முதலில் 1970 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். இதன்பின் அவரின் வாழ்க்கையில் ஏறுமுகம்தான். கேரளத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவரான ஈ.கே.நாயனார் தலைமையிலான அப்போதைய அரசில் மின்சாரம் மற்றும் கூட்டுறவுத் துறையின் அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றினார். 2002ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் என்ற உச்ச பதவியை அடைந்தார்.
மக்கள் நலனுக்காக யாரையும் எதிர்க்கும் துணிவு கொண்டவர் பினராயி. அது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி… தன் சொந்த கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும் சரி எதிர்க்க தயங்கமாட்டார். கண்ணூரில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்க யுடிஎஃப் அரசு முடிவு செய்தபோது, புதிய பல்கலைக்கழகம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை சிபிஎம் கொண்டிருந்தது. கேரளத்தின் முன்னாள் முதல்வரும், பினராயி விஜயனின் சொந்த கட்சியை சேர்ந்த சங்கரன் நம்பூதிரி ஒரு புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பது தேவையற்றது என்றும் கூறினார். ஆனால், அப்போது பினராயி எடுத்த நிலைப்பாடு ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பதாகும். அவரின் முயற்சியாலேய அந்த மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டது. இப்போது அந்தப் பகுதியின் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடுமையான எதிரிகள் கூட பினராயி ஒரு உறுதியான நபர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். பினராயி விஜயனின் வாழ்க்கையை ஒரு சில வார்த்தைகளாகக் குறைக்க முடியாது. கேரளத்தின் மற்ற முதல்வர்களை விட அதிக பிரச்சனைகளை சந்தித்தவர் பினராயி. எந்த முதல்வர் ஆட்சியிலும் இவ்வளவு இயற்கை துயர்கள், அரசியல் சர்ச்சைகள் வந்ததில்லை. ஆனால் அது அனைத்தும் பினராயிக்கு நேர்ந்தது. சபரிமலை விவகாரம், பெரு வெள்ளம், இரண்டு நிலச்சரிவுகள், தங்கம் கடத்தல் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் விவகாரம், என ஒவ்வொரு விஷயங்களும் பினராயின் முதல்வர் நாற்காலியை அசைத்து பார்த்தது.
அதிலும், மகனின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தால் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன் கட்சிப் பதவியை விட்டுவிட்டு நீண்டகால விடுப்பில் செல்ல தனி ஆளாக, தலைமை தாங்கி உள்ளாட்சித் தேர்தல், இதோ இப்போது சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இரண்டிலும் வெற்றி கனியை பறித்திருக்கிறார். எமெர்ஜென்சிக்குப் பிறகு கேரளத்தில் நடந்த தேர்தல்களில் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருப்பது தான் வரலாறு. கேரள மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு எதிராகவே வாக்களித்து எதிர்க்கட்சியை செய்திருக்கிறார்கள். ‘இம்முறை அந்தச் சரித்திரத்தை மாற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்’ என்று சூளுரைத்து பினராயி தலைமையில் பணியாற்றியது ஆளும் சி.பி.எம். அதன்படியே சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார் தோழர் பினராயி விஜயன்!