Home » கொசுக்களின் வாரிசு வரலாறு!

கொசுக்களின் வாரிசு வரலாறு!

by
0 comment

கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்
கொசுவுக்கு ரத்த தானம் செய்யாத உயிரினமே உலகில் இல்லை. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ள எல்லா இடங்களிலும் கொசுக்கள் உண்டு. கொசுக்களுக்கு முதன்மையான உணவு தாவரங்களின் சாறுதான். ஆண் கொசு விலங்குகளைக் கடிப்பதில்லை. பெண் கொசுக்களுக்குக்கூட ரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் விலங்குகளைக் கடித்து ரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.

வீடுகளில் தேங்கும் சின்னஞ்சிறிய நீர்ப்படலம்கூடக் கொசு முட்டையிட வசதியானது. வீடுகளில் நடமாடும் கொசு இரவில் மட்டுமே வேட்டையாடுகிறது. அது ‘க்யூலக்ஸ்’ வகையைச் சேர்ந்தது. பிரபல இயற்கை அறிவியல் அறிஞரான லின்னேயஸ், திருட்டுத்தனமாக எட்டிப் பார்க்கும் பூச்சி என்ற பொருளைத் தரும் ‘பிப்பியன்ஸ்’ என்ற அடைமொழியைக் கொசுவுக்கு அளித்திருக்கிறார். அது மிகவும் பொருத்தமானது. ஜன்னல் வலை அல்லது கொசு வலைக்கு வெளியே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு சிறிய துளை தென்பட்டால்கூடக் கொசு உள்ளே வந்துவிடும். அத்துடன் கொசுவுக்கு இருட்டுதான் பிடிக்கும். படுக்கையறை விளக்கை அணைப்பது, ‘சாப்பாடு தயார்’ என்று கொசுவுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்.

கொசுவின் மோப்ப சக்தி

கொசுவின் தலையில் ரசாயனங்களை மோப்பம் பிடிக்கும் ஓர் உறுப்பு உள்ளது. அது வாசனை உணர்வும் தொடு உணர்வும் சேர்ந்து பெற்ற உறுப்பு. உடலிலிருந்து வெளிப்படும் மணம் மற்றும் வெப்பத்தின் திசையைக் கண்டுபிடித்து, கொசுவுக்கு அவை வழிகாட்டும். குறிப்பாக, தோலை ஒட்டியுள்ள ரத்தக் குழல்களிருக்கும் இடங்களே கொசுவுக்குப் பிடித்தமான தரையிறங்கு தளங்கள். சில இனப் பூச்சிகளுக்கு இந்த உறுப்புகள் தலையின் உணர்கொம்புகளிலும், சிலவற்றுக்குக் கால்களிலுள்ள நுண் மயிர் முனைகளிலும் அமைந்துள்ளன.

வீடுகளிலுள்ள கொசுக்கள் தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும். அதற்காகவே அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும். கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்யும்.

பெண் கொசுவின் பாதங்களில் மடிப்புகளும் கொக்கியிழைகளும் உள்ளன. பலமான காற்றடித்தாலும் அது பிடியை விடாது. அதன் மூக்கில் பலவிதமான ஊசிகளும், தேடல் முனைகளும், துளையிடு முனைகளும் உண்டு. ஒரு துளையிடு முனை உள்ளீடற்ற குழலாக இருக்கும். அது ‘ஆக்கர்’ கருவியைப் போல எவ்வளவு கடினமான தோலையும் துளைத்து ரத்தத்தை உறிஞ்ச உதவும்.

மனிதர்களின் கைகள் அல்லது விலங்குகளின் வால் எட்டாத இடங்களைக் கண்டுபிடித்து அமர்கிற திறன் கொசுவுக்கு உள்ளது. தான் உட்காரும் இடத்திலுள்ள தோலில் துளையிட்டவுடன் வலியை மரத்துப்போகச் செய்யும் ஒரு திரவத்தை உமிழ்கிறது. அத்துடன் அந்தத் திரவம் ரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து நீர்த்துப் போகவும் வைக்கிறது. அது, கொசுவின் மிக நுண்ணிய உறிஞ்சு குழலில் ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்ளாமல் தடுக்கும். உறிஞ்சு குழலின் தலைமுனையில் சுருங்கி விரியும் ஒரு குமிழ் உள்ளது. அது சுருங்கும்போது ரத்தம் கொசுவின் உடலுக்குள் பாய்கிறது. விரியும்போது கடிபடும் விலங்கின் ரத்தம் கொசுவின் உறிஞ்சு குழலின் உள்ளே பாய்கிறது. பல சமயங்களில் கொசு தன் எடையைப் போல மூன்று அல்லது நான்கு மடங்கு எடையுள்ள ரத்தத்தைக் குடித்துவிட்டு, உப்பிப்போய்ப் பறக்க முடியாமல் தரையில் விழுவதுண்டு. படுத்திருப்பவர் புரண்டால் அடியில் சிக்கி நசுங்கிப்போவதும் உண்டு.

ஏன் அடிக்க முடிவதில்லை?

பல சமயங்களில், படுக்கையறையில் பலர் படுத்திருக்கிறபோது, மறு நாள் காலையில் ஒருவர் மட்டும் “ராப்பூரத் தூங்க முடியலை, ஒரே கொசுக்கடி!” என்று புலம்புவதும், மற்றவர்கள் “என்ன சொல்கிறாய்… இங்கே கொசுவே கிடையாது” என்று மறுப்பதும் உண்டு. உண்மையில், கொசு எல்லோரையும் கடிப்பதில்லை. அவரவர் மூச்சில் வெளிப்படும் கரியமில வாயுவின் அளவு, சுவாசத்தின் எண்ணிக்கை மற்றும் மணம் போன்றவை கொசுவுக்கு உவப்பாக இல்லாவிட்டால் அது கடிக்காது. படுக்கப்போகும் முன் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப்போனால், உடல் வெப்பநிலை குறைந்து கொசுவினால் கண்டுபிடிக்க முடியாமல் போகும். வெண்மையான உடைகளை அணிந்து, வெளிர் நிறமுள்ள போர்வைகளால் போர்த்திக்கொண்டாலும் கொசு கடிக்காது. பளபளப்பான செயற்கை இழைப் போர்வைகளையும் உடைகளையும் தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலும் கொசுவை அடிப்பதில் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. அடிக்கக் கையை ஓங்கும்போது உடலின் எல்லாப் பகுதிகளிலும் ஓர் இறுக்கம் தோன்றி தோலில் அதிர்வுகள் உண்டாகும். கடித்துக்கொண்டிருக்கிற கொசு அதை உணர்ந்து பறந்துவிடும். கொசு வயிறு நிரம்பும் வரை பொறுத்திருந்தால், அது உண்ட மயக்கத்திலிருக்கும்போது மிக எளிதாக அதை நசுக்கிவிடலாம்!

ஆண் கொசு சராசரியாக ஒரு வாரம்தான் வாழும். அது முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கிறது. அது முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். அது நிறைவேறுவதற்கு முன் குளிர்காலம் வந்துவிட்டால், ஏதாவது ஓர் இடுக்கில் நீள்துயிலில் ஆழும். அது நான்கைந்து மாதங்கள்கூட நீடிக்கலாம். முட்டையிட உகந்த காலம் வந்ததும் அது விழித்துக்கொண்டு முட்டையிடப் போகும். ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது. எனவே, கொசுக்களை அழிப்பது தவிர்க்க முடியாதது. அதேசமயம், அடியோடு அழிக்க நினைப்பது அபாயகரமானது.

அடியோடு ஒழிந்துவிடக் கூடாது;-

முட்டைகளிலிருந்து வெளிப்படும் புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறி, பின்னர் கொசுக்களாக வெளிப்படும். பெண் கொசுக்கள் வெளிப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னரே ஆண் கொசுக்கள் வெளிவந்து இணை சேரும் உந்துதலுடன் நீர்ப்பரப்பின் மேல் வட்டமிடும். கொசுக்களில் ஏறத்தாழ 3,000 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் சிலவே நோய் பரப்புகிறவை. கொசுக்களால் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மனித இனம் நம்புகிறது. கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும். பல்வேறு பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் மீன்களுக்கும் தவளை போன்ற உயிரினங்களுக்கும் புரதம் செறிந்த உணவாகக் கொசுக்கள் அமைகின்றன. அவை முற்றாக அழிக்கப்பட்டால் அவற்றை உண்ணும் உயிரினங்களும் அழிந்துபோகலாம்!

கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter