பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தனது ஓட்டலில் தயார் செய்யப்படும் இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கவலையில் உள்ளனர்.
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் 14 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு மேல் ஊரடங்கு அமலில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் ஹோட்டல் நடத்திவரும் சிவா என்ற இளைஞர் தன்னால் முடிந்த அளவு காலையில் மட்டும் தினசரி சுமார் 200 பேருக்கு இட்லி, இடியாப்பம், தோசை உள்ளிட்டவைகளை பார்சலாக கட்டி இலவசமாக வழங்கி வருகிறார்.இது குறித்து ஹோட்டல் முதலாளி சிவா கூறுகையில், சென்ற கொரோனா முதல் அலையின்போது என்னால் முடிந்தளவு மூலிகை சூப் வழங்கினேன். எனக்கு ஹோட்டல் நடத்துவதில் சில நடைமுறை சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது.சிரமங்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த அளவிற்கு இட்லி, இடியாப்பம், தோசை உள்ளிட்டவைகளை தினசரி 200 பேருக்கு பார்சலாக வழங்கி வருகிறேன். லாக்டவுன் முடியும்வரை இலவசமாக உணவு வழங்க உள்ளேன் என்றார்.