நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.94.71 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.88.62 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் – டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.
நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பீகார் தேர்தலை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலை உயர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் பீகார் தேர்தல் முடிந்த உடன் நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியது. தினசரி விலை உயர்வினால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. சில நாட்கள் விலைகள் குறைக்கப்பட்டன. இந்த நிலையில் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.94.71 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.88.62 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தினசரியும் பெட்ரோல், டீசல் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.