தமிழகத்தில் ‘ஒகி’ குறித்த ஆபத்து நீங்கினாலும் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வரும் 4 , 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் ஆபத்து உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி ஒகி புயல், தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி செல்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது. என்றாலும், தென் மாவட்டங்களில் இன்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை கொட்டி வருவதால் பொத மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சாகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் வலுப்பெற்று நகர்ந்து சென்று லட்சத்தீவு பகுதியில் உள்ள அமினித்தீவுக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவை கடந்து செல்லும் என கூறினார்..
புயலின் தலைப்பகுதி தற்போது லட்சத்தீவு அருகே இருந்தபோதிலும் அதன் வால் பகுதி தமிழகத்தை ஒட்டிய பகுதியில் இருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அது புயல்சின்னமாக வலுப்பெற்று வருகிற 4-ந் தேதிக்குள் வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த தகவலை இந்திய நீர்வள ஆணையமும் உறுதி செய்துள்ளது.
‘சாகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டைப்போல் பெரு வெள்ளமோ அல்லது கடந்த டிசம்பரில் அடித்த வர்தா புயல்போல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாத ஆபத்து தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறித்து ஏசியா நெட் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.