மதுக்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கொரோனா கால உதவி மையம் கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள், பயணிகள் என பலதரப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்ட வருகின்றது.
இந்நிலையில் மதுக்கூர் தமுமுக சார்பில் ‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ என்ற நோக்கத்தில் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் முகாம் இன்று மதுக்கூர் தமுமுக கொரோனா கால உதவி மையத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு வருகை தந்த பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை, திட்டத்தை துவங்கி வைத்து ஏழைகளுக்கு அரிசி பைகளை வழங்கினார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தீவிர களப்பணியாற்றி வரும் மதுக்கூர் தமுமுகவினரின் பணிகளை பாராட்டி, வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு மதுக்கூர் தமுமுக, மமக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது, மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஃபவாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் பேரூர் தமுமுக செயலாளர் பைசல் அகமது, பேரூர் மமக செயலாளர் தாஜுதீன், பொருளாளர் முகமது ஷேக் ராவுத்தர், முன்னாள் மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், திமுக முன்னாள் கவுன்சிலர் ரியாஸ் அகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஹாஜா மைதீன் மற்றும் தமுமுக, மமக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.





