நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தொட்டுவிட்டது.
இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிரையில் நான்கு இடங்களில் இன்று காலை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, அதிரை நகர தலைவர் அஹமது அஸ்லம், நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர இணைச் செயலாளர் அகமது, நகர செயற்குழு உறுப்பினர்கள் ஜர்ஜிஸ் அகமது மற்றும் கிளை நிர்வாகிகள் ஜமால் முஹம்மது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகள் ஏந்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.



