தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று(10/06/2021) பிற்பகல் பராமரிப்பு பணிக்காக ஒன்றரை மணிநேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 1 மணிநேரத்திற்கும் மேலாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வரும் நிலையில், தமிழக அரசின் பெயரை கெடுக்கும் வகையில் அதிரை மின்வாரியம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில், தொடர் மின்வெட்டை பொறுக்கமுடியாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று வருகின்றனர். அதிரையில் ஏற்படும் தொடர் மின்வெட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதிரைக்கு வரவேண்டிய துணை மின்நிலையத்தை உடனே அமைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.