குறுவை சாகுபடி பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணை தண்ணீரை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 97.33 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. வழக்கமாக மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். சரியான தேதியில் இன்றைய தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார்.
முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பணிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று 11.30 மணியளவில் தண்ணீர் திறந்து விட்டார். மலர்களைத் தூவி இன்று அணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். முதற்கட்டமாக 3000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் படிபடியாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் அதாவது 2.11 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
இந்த தண்ணீர் 16ஆம் தேதி கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து கிளை கால்வாய்கள் மூலம் கடைமடை தண்ணீர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து 165 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் வரலாற்றில் 88 ஆவது ஆண்டாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 2வது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அமைச்சர்கள் மட்டுமே மேட்டூர் அணையை திறந்து வைத்தனர். முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு மேட்டூர் அணையை திறந்து வைத்தார். நடப்பாண்டு திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் முதல்வர் மு.க ஸ்டாலின் அணையை திறந்து வைத்து காவிரி நீருக்கு மலர் தூவி வழி அனுப்பி வைத்தார்.
மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க ஸ்டாலின். அணை திறக்கப்பட்ட போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.



