கொரோனா தொற்றின் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த மே மாதம் முதற்கட்டமாக ரூ.2000 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் தவணை ரூ.2000 நிவாரணம், இம்மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அதனுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்திற்கான டோக்கன்கள் ஏற்கனவே பயனாளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் இத்திட்டம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அதிரையில் உள்ள நியாய விலைக்கடைகளில் இத்திட்டத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அப்போது பயனாளிகளுக்கு கொரோனா இரண்டாம் தவணை நிவாரணம் ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், துணை செயலாளர் அன்சர்கான், முன்னாள் சேர்மன் அஸ்லம் மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.



