தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை தமுமுகவினர் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் சாமி கோவில் பூசாரி பெரியசாமி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என பூசாரியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் மதுக்கூர் தமுமுகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஃபவாஸ், தவ்ஃபிக், தமிழ், பாசித் ஆகியோர் அடங்கிய மதுக்கூர் தமுமுகவின் நல்லடக்க குழு, கோவில் பூசாரி பெரியசாமியின் உடலை சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 35 உடல்களை மதுக்கூர் தமுமுகவினர் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறுப்பை விதைத்து குறிப்பிட்ட சிலரை திட்டமிட்டு தாக்குவதும், அவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதும் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்க, மனிதநேயத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன…


