Home » அதிரையில் கருவாடு உற்பத்தி தொழில் பாதிப்பு – வியாபாரிகள் கவலை!

அதிரையில் கருவாடு உற்பத்தி தொழில் பாதிப்பு – வியாபாரிகள் கவலை!

by
0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மீன் கருவாடு வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் துறைமுக பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து உப்பு தண்ணீரில் ஊறவைத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளாக்கி கருவாடுகளை பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி,  மதுக்கூர் மற்றும் கிராம பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர். 

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கருவாட்டு சந்தைகள் மூடப்பட்டு இன்னும் திறக்கப்படாததால் கருவாடு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் கருவாடு காயவைக்கும் பணி நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது அரசு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மீன் கருவாடு வியாபாரிகள் துறைமுக பகுதிகளுக்கு சென்று அங்கு உள்ள மீன்களை மொத்தமாக வாங்கி மீன்களை சுத்தப்படுத்தி உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து வருகின்றனர். இந்நிலையில் மழை பெய்ததால் வெயிலில் உலரவைத்த கருவாடுகளை பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 

கடந்த சில நாட்களாக அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருவது தொழிலாளர்களை மீண்டும் கவலை அடைய செய்து உள்ளது.  தற்போது சந்தைகள் திறக்கப்படாமல் உள்ளதால் ஒரு கிலோ தோளி பொடி கருவாடு ரூ.40-க்கும், தோகை கருவாடு கிலோ ரூ. 100-க்கும், ஒரு கிலோ பன்னா கருவாடு ரூ. 100-க்கும் துறைமுக பகுதிகளிலேயே தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். 

இது குறித்து கருவாடு உற்பத்தி தொழிலாளர்கள் கூறியதாவது:-

 நாங்கள் மீன்களை விலைக்கு வாங்கி உப்பு போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்து விற்பனை செய்யும் நேரத்தில் திடீரென மழை பெய்வதால் எங்கள் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடலில் மீன் வரத்து குறைவாக உள்ள நிலையில் பெரிய மீன்கள் வரத்து இல்லாததால் சிறிய வகைமீன்களை வாங்கி வெயிலில் உலர வைத்து வருகிறோம். வெளியூர் சந்தைகள் மூடப்பட்டதால் கருவாடு தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter