Home » CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

0 comment

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

ராஜ்யசபாவில் CAA சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் துணையோடு ராஜ்யசபாவில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தசூழலில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அதிமுகவினர் வெளியேறினர் என்பதே உண்மை. ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது. எனவே இந்த சட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனிதீர்மானத்தை கொண்டுவந்துள்ளேன்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter