திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் சமூக சேவையும் செய்து வந்தார். இந்த நிலையில் வசீம் அக்ரம் ஜீவா நகர் பகுதியில் மசூதியில் இருந்து தொழுகையை முடித்து வெளியே வந்தார்.
அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வசீம் அக்ரமமை சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் உடலின் பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த வசீம் அக்ரம் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்.மேலும், கொலை வெறி அடங்காத மர்ம கும்பல், வசீம் அக்ரம் தலையை தனியாக துண்டித்து தங்கள் வந்த காரில் எடுத்துச் சென்றனர்.
இந்த படுகொலை சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வசீம் அக்ரமமை கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அங்கு இருந்த பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன. இதனால் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட எஸ்பி, ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வசீம் அக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வசிம் அக்ரம் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வேலூர் போலீஸ் எஸ்.பி செல்வகுமார் தகவல் தெரிவித்துளளார். வசீம் அக்ரம் படுகொலைக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர்.
மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.