தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் முன்னாள் உறுப்பினர் சாட்டை துரைமுருகன் பேசியது சர்ச்சையானது. குமரியில் மலைகளை குடைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு மலைகளை குடைவதை தடுக்க தவறிவிட்டது, அரசு இயற்கை வளங்களை காக்கவில்லை என்று விமர்சனம் வைத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த மேடையில் பேசினார்.
சாட்டை துரைமுருகன் தனது பேச்சில் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சீமானும் இந்த அவதூறு பேச்சுக்கு எதிர்ப்புக் காட்டாமல் மவுனமாக இருந்தார். கேரளாவில் இது போன்று மலைகளை குடையவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மலைகளை குடைந்து அதை கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள். என்ன கொடூரம் இது என்று கூறிய சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். மேடையில் இதுவரை பேசக்கூசும் வகையில் மிகவும் அவதூறாக விமர்சனம் செய்தார்.
தமிழ்நாடு முதல்வரையும் கேரளா முதல்வரையும் ஒப்பிட்டு சாட்டை துரைமுருகன் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக கன்னியாகுமரியில் போலீசாரிடம் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. அதோடு தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பலர் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து இருந்தனர். இணையத்திலும் திமுகவினர் பலர் சாட்டை துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
திமுக எம்பி செந்தில்குமார் ஆகியோரும் சாட்டை துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதோடு சாட்டை துரைமுருகன் இன்னொரு பக்கம் தனது யூ டியூப் பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அவதூறாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராகவும் திமுகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தனர். திமுக எம்பி செந்தில்குமாரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
திமுக எம்பி செந்தில்குமார், சிலர் தங்கள் அடுத்த நகர்வை அவர்களே தேடி கொள்ளும் நிலையில் பயத்தின் காரணமாக மேலும் ஆதாரத்துடன் தவறு செய்து மாட்டிகொள்வர்கள். அவர்கள் விதியை அவர்களே முடிவு செய்தால் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் எம்பி செந்தில்குமார் இது தொடர்பாக தருமபுரி காவல் கண்காணிப்பாளரிடம் புகாரும் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக சாட்டை முருகன் உள்ளிட்ட இருவர் மீது தக்கலை உதவி ஆய்வாளர் ராஜசேகர் கொடுத்த புகாரில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னைக்கு செல்ல முயன்ற சாட்டை முருகனை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி அருகே இன்று அதிகாலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.
பின்னர் சாட்டை துரைமுருகனை பத்மனாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை வரும் 25ம் தேதி வரை சிறையில் அடைக்க – பத்மனாபபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்ட்டார். கடந்த ஜூன் மாதமே திருச்சியில் வாகன நிறுவன ஊழியர் ஒருவரை மிரட்டியதாக யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடியாட்களுடன் சென்று வாகன நிறுவன ஊழியரை மிரட்டியதாக துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து போஸ்ட் செய்ததற்கான வினோத் என்ற நபரை திருச்சியில் சாட்டை துரைமுருகன் மிரட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் பிணையில் வெளியான நிலையில் மீண்டும் தற்போது கைதாகி உள்ளார்.