Home » ஆட்டிப்படைக்கும் கமிஷன்! லட்சங்களை அள்ளி கொடுத்தும் வீட்டு கட்டுமான வேலை முடிந்தபாடில்லை!! என்ன நடக்கிறது அதிரையில்?

ஆட்டிப்படைக்கும் கமிஷன்! லட்சங்களை அள்ளி கொடுத்தும் வீட்டு கட்டுமான வேலை முடிந்தபாடில்லை!! என்ன நடக்கிறது அதிரையில்?

by
0 comment

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாரித்த ஒருவர், அதிரையில் வீடு கட்ட விரும்புகிறார். அதற்காக உள்ளூரில் கட்டடம் கட்டும் தொழில் செய்யும் நபர்களும் கட்டட அளவுக்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு அவருக்கு மொத்த பட்ஜெட் கொடுக்கிறார்கள். (அனைத்து வேலைகளையும் முடித்து வீட்டு சாவியை கொடுப்பது வரையிலான பணிகளுக்கான கால அளவுடன் கூடிய மொத்த பட்ஜெட் இது).

இந்நிலையில் சிலர், ஏன் மொத்த விலையில் கட்ட கொடுக்குரீங்க? அதில் அவருக்கு அவ்வளவு லாபம் வரும்! தரமற்ற பொருட்களை பயன்படுத்துவார் என பிரச்சாரம் செய்து, பின்னர் என்னிடம் கொடுங்கள் 10% கமிஷனுக்கு கட்டி தருகிறேன் என கொக்கி போடுகின்றனர். இதனால் உங்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதுடன் காசும் மிச்சமாகும் என மனகணக்கு போட்டு கொடுக்கிறார்கள்.

அதனை நம்பி களத்தில் இறங்கும் பலரும் கடைசியில் போட்ட பட்ஜெட்டைவிட செலவு அதிகரித்து விட்டதாகவும் வீட்டு வேலையும் முழுமையாக முடியவில்லை எனவும் புலம்புகின்றனர்.

காரணம் 10% கமிஷனில் அதிக லாபம் சம்பாரிக்க வேண்டும் என எண்ணுவோர் கொத்தனாருக்கு ரூ.750/- கொடுக்க வேண்டிய இடத்தில் ரூ.850/- முதல் ரூ.950/- வரை கொடுக்கின்றனர். இதேபோல் ஆண்/பெண் உதவியாளர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு 20% வரை கூடுதல் செலவு ஏற்படும். இன்னும் சிலர் கொத்தனார் உள்ளிட்ட பணியாட்களுக்கு ஒரு சம்பளத்தை கொடுத்துவிட்டு வேறொரு சம்பளத்தை கணக்கில் எழுதுவதுண்டு. இதனால் கட்டுமான செலவு கிர்ரென எகிறிவிடுகிறது. அதேசமயம் கமிஷன் முறையில் வீடு கட்டி கொடுப்பவருக்கு நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நஷ்டம் இல்லாத இடத்தில் பணிகளுக்கான கண்காணிப்பும் குறையும்.

இதுகுறித்து வீட்டை கட்டியவரிடம் கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் “நீங்க காசு கொடுக்க கொடுக்க நான் வேலை பார்த்தேன்! இந்தாங்க கணக்கு, எனக்கான கமிஷனை கொடுங்க”. அப்போது என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்பவர்கள் ஏராளம். ஏனெனில் கட்டடத்தின் செலவுக்கான உச்சவரம்பு இல்லாததால் கட்டுமான மேஸ்திரியிடம் கேள்விகள் எதுவும் கேட்க முடியாது. அதேசமயம் மொத்த கான்டிராக்ட் என்றால் முன்பு பேசியபடி தவணை அடிப்படையில் பணம் கொடுத்தால் மட்டும் போதும். வேலையை முடித்து தர வேண்டியது மொத்த கான்டிராக்டரின் தலையாய கடமையாகும்.

ஓர் பணியை சிறப்பாக செய்து முடிக்க திட்டமிடல் என்பது மிகவும் அவசியமாகிறது. அது நாட்டின் பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, குடும்ப நிர்வாக நிதியாக இருந்தாலும் சரியே.

என்ன செய்ய போகிறோம்? எப்படி செய்ய போகிறோம்?? அதற்கான நிதி ஆதாரம் என்ன??? பணிக்கான கால அளவு? முதலியவற்றை முடிவு செய்து அதன்படி நடப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வீடு கட்டுவதற்கும் இது பொருந்தும்.

இவை துறைசார்ந்த நிபுணர்களுக்கு அத்துப்பிடி. ஆனால் வாழ்நாளில் ஒருமுறை மட்டும் வீடு கட்டும் நபர்களுக்கு நிலைமை அவ்வாறு இல்லை!

வீடு கட்டுவதற்கு முன் 10 பேரிடம் விசாரியுங்கள். அதில் எவர் தெளிவாக ஒப்பந்தம் செய்து தரமான பொருட்களை பயன்படுத்தி வீட்டு வேலைகளை முடித்து கொடுக்கிறார் என கண்டறியுங்கள். அவசரம் வேண்டாம்! சரியான நபரை கண்டறிய தங்களுக்கு 6 மாதங்கள், ஏன் ஓராண்டு கூட ஆகலாம்.

நீங்கள் செய்ய கூடிய ஒப்பந்தத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விவரங்கள் குறித்து வெளிப்படையாக குறிப்பிட செய்யுங்கள். வரவு செலவுகள் தெளிவாக இருக்கட்டும். அது வீண் சந்தேகங்களை தவிர்க்கும். சச்சரவுகளுக்கு வழிவகுக்காது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter