தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 மூன்று நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் விடாமல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அதிரை நகரம் முழுவதும் வெள்ளநீரில் தத்தளிக்கிறது. நேற்று இரவு முழுவதும் 134மிமீ அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக அதிராம்பட்டினத்தின் முக்கிய குளங்கள் நிரம்பி வழிகின்றன. குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து, வீடுகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. அதுமட்டுமின்றி மழைநீர் செல்லும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், முறையாக தூர்வாரப்படாததாலும் மழைநீர் ஆங்காங்கே அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் அதிரை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், இருக்கும் இடம் தெரியாமல் மழை நீரில் மூழ்கியுள்ளது. பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, முத்தம்மாள் தெரு, பிலால் நகர், ஹாஜா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் முறையாக தூர்வாரப்படாத வடிகால்களால் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகின்றன. மழைப்பொழிவு தொடர்ந்து இருப்பதால், மக்கள் இன்னும் சிரமத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதும், முறையாக தூர்வாரப்படாததுமே அதிரை இத்தகைய சூழலை சந்திக்க காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோர் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில், அதிரையில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிட்டார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பருவமழை காலங்களில் அதிரை வருடாவருடம் வெள்ளத்தில் மிதப்பது வாடிகையாகிவிட்ட நிலையில், அதனை தடுக்க வரும் காலங்களில் முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…














