தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த 17செ.மீ மழை காரணமாக அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆக்கிரமிப்புகளாலும், வடிகால்கள் தூர்வாரப்படாததாலும் மழைநீர், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நகரில் பிரதான தெருக்கள் பலவற்றிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன், பேரூராட்சி நிர்வாகம் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாததே அதிரை இப்படி மழைநீரில் மிதப்பதற்கு பிரதான காரணம் என அதிரைவாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மழைநீர் வெள்ளத்தால் தத்தளிக்கும் அதிரையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., இன்று(03/11/2021) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆக்கிரமிப்புகள் மற்றும் வடிகால்கள் தூர்வாராதது குறித்து பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகாரளித்தனர். இதனை கேட்டுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதனைத்தொடர்ந்து ஈசிஆர் சாலையில் வடிகால்களை ஒட்டிய ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியருடன் ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர், பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.