வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இளம் நாற்றுகள் நீரில் அழுகத் தொடங்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் மூழ்கியுள்ளன.
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஏக்கர் அளவில் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில்நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் தொடர்ந்து கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ச்சியான பாதிப்புகளைத் தமிழகம் சந்தித்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படை செயல்பட்டு வருகிறது.
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று வரை முதல்வர் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் தொடர்ச்சியான பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கவேண்டுமென முதல்வர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்யுமாறு அறிவுறுத்தினார். மழை பாதிப்புகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தபிறகே இழப்பின் மதிப்பீடு மதிப்பிடப்பட்டு அதற்கான நிவாரணத் தொகையைப் பெற மத்திய அரசிடம் கோரிக்கையாக வைக்க முடியும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகரில் 4 நாட்கள் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மிக அளவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். இந்த ஆய்வு 2 நாட்கள் தொடரும் எனவும், அதற்கு முன்னதாக மழை பாதிப்புகளைப் பார்வையிட இன்று மாலை கடலூர் மாவட்டம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரின் ஆய்வு ஒருபக்கம் இருக்க, டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர் குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் உள்ளனர்.

