வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களாக வெழுத்துவாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை உடனடியாக பாதுகாக்கவும், பயிர் சேத விவரங்களை நேரில் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் 7 அமைச்சர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சக்கரபாணி, ரகுபதி, பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர், எம்பி-க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், இராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவில் செழியன், எம்எல்ஏ-க்கள் கும்பகோணம் அன்பழகன், தஞ்சை நீலமேகம், திருவையாறு துரை. சந்திரசேகரன், பாபநாசம் ஜவாஹிருல்லாஹ், மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா, பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.








