| மரம் விழுந்து மரணிக்க இருந்தவரை கரம் கொடுத்து காப்பாற்றியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர். அவரது செயலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.
மழை தான்… எங்கும் மழை தான்… அடை மழை அல்ல….அடாவடி மழை…. சென்னையில் பெய்யும் மழையில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பலரும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில்தான்…. மழை நீரில் அந்த மனிதாபிமானம் பூத்து மலர்ந்தது.
மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, காவல் துறையினர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளும் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் டி.பி சத்திரம் கல்லறை பகுதியில் மரம் விழுந்து விட்டதாக தகவல் கிடைக்க, மீட்புப் பணிக்காக
விரைந்தனர் காவல்துறையினர்… அங்கோ கல்லறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீது மரம் விழுந்து சுருண்டு கிடந்துள்ளார்… அந்த இளைஞர் செத்தே போய்விட்டார் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான், டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இடி – மழைக்கு இடையே மின்னல் வேகத்தில் களத்தில் இறங்கினார்.
டி.பி சத்திரம் கல்லறையில் பணிபுரியும் உதய் என்ற அந்த இளைஞருக்கு உயிர் இருப்பது தெரிய வந்த நிலையில், கொஞ்சம் கூட தாமதிக்காமல் காக்கி உடை அணிந்த தோள்களில் இளைஞரை சுமந்தார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. பரபரப்பான அந்த நொடிகளில் இளைஞர் உதய்யை சுமந்து வந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்க, ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும். இயற்கை மழைக்கு இடையே, பாராட்டு மழை பொழிந்து வருகிறது. ராஜேஸ்வரி, தனது உயிரை துச்சமாக நினைத்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட நிகழ்வுகளும் காவல் துறைக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளன.
சென்னை அயனாவரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மாற்று திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநகரையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு அதில் தொடர்புடைய 12க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய, முக்கிய காரணமாக இருந்தார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற ஒரு கடைக்காரரிடம் ராஜேஸ்வரி சோதனை மேற்கொள்ள, அவர் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவற்றையெல்லாம் விட உச்சகட்டமாக, கடந்த 2019ஆம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. சென்னையில் நள்ளிரவில் இரண்டு மணிக்குப் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை, தன்னுடைய காவல்துறை ரோந்து வாகனத்தில் ஏற்றிச்சென்ற ராஜேஸ்வரி, தாயையும் சேயையும் தக்க சமயத்தில் காப்பாற்றினார்.
இப்படி, கருணை மிகுந்த காரியங்களின் பட்டியலுக்கு உரியவரான ராஜேஸ்வரி தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ வரலாறு படித்தபின், 1999ம் ஆண்டு நடந்த காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி எஸ்.ஐ.யாக பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலை பாராட்டி, நேற்று அவரை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் கொடுத்து, அவரிடம் உரையாடியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கனமழையில் வீட்டுச்சுவர்கள் விழலாம்… மரங்கள் விழலாம்… ஆனால் ஒருபோதும் மனிதாபிமானம் விழுந்துவிடாது என நிருபீத்துள்ளார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி


