Home » பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை.. தமிழக அரசிடம் வலுக்கும் கோரிக்கை!

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை.. தமிழக அரசிடம் வலுக்கும் கோரிக்கை!

0 comment

ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களிடம் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தவிர பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ந்து நடந்து வருகிறது. பாலியல் தாக்குதல்களை முற்றிலுமாகத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பாலியல் சம்பவத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை, உக்கடத்தைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியரையும், தனது மரணத்திற்குக் காரணமான மற்ற இருவரையும் சும்மா விடக்கூடாது எனக் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் தற்கொலை செய்துகொண்ட அம்மாணவி கடந்த ஆண்டு பதினோராம் வகுப்பு பயின்றபோதே இணைய வழி வகுப்பில் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தால் தங்களது பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும் எனக் கருதிய பள்ளி நிர்வாகம், மாணவியை சமாதானம் பேசி அனுப்பியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பள்ளி நிர்வாகம் தங்களது சுயநலத்திற்காகத் தங்கள் பள்ளியில் நடந்த தவறை மறைத்து, தவறிழைத்த ஆசிரியரைக் காப்பாற்றியதால்தான் அந்த மாணவி அரசுப் பள்ளிக்கு மாறிய பிறகும் கூட, ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்ந்து, அம்மாணவியின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. எனவே மாணவியின் மரணத்திற்குக் காரணமான ஆசிரியர் மீது மட்டுமின்றி நடந்த தவறை மறைத்து ஆசிரியரைக் காப்பாற்ற முயன்றுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் காவல்துறையும், நீதித்துறையும், தமிழக அரசும் பத்தோடு ஒன்று இவ்வழக்கு என வழக்கம் போல் குறட்டை விட்டுத் தூங்காமல், பாதிக்கப்பட்ட மாணவியின் மரணத்திற்குத் தாமதமின்றி நீதி கிடைக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவும், பெண் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலுமாகத் தடுக்க, சட்டங்களைக் கடுமையாக்க முன்வர வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter