இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவில் 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் சேவைகள் கொரோனா காரணமாக குறைந்தன. கொரோனா தொற்று குறைந்த பின்னர் சிறப்பு ரயில்களாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கி உள்ளன. தற்போதைய நிலையில் சிறிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள், முன்பதிவு இல்லாத பல ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 19 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் சேவை கடந்த புதன்கிழமை (நவ.10) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவையும் (நவ.10) தொடங்கியது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2.10 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்குப் பழநி சென்றடைகிறது. பழநியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடைகிறது. இந்த இரண்டு ரயில்கள் மட்டுமல்ல, கோவை மேட்டுப்பாளையம், தாம்பரம் சென்னை ரயில் என அனைத்து ரயில் சேவைகளும் பழையபடி தொடங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவுக்கு முந்தய கால ரயில் சேவையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது தெற்கு ரயில்வே. அதன் எதிரொலியாக, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவு 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு பயணிகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.30க்குள் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.