நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று முற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு இன்று காலை பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் மரம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி கீழே நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததாக இன்று மாலை இந்திய விமானப்படை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு இன்று இரவு சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நாளை பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்கள், டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

