கொரோனா பரவல் காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இரவு நேர லாக்டவுன் தமிழ்நாடு முழுக்க அமலில் உள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இனி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் 10 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 19ம் தேதி திருப்புதல் தேர்வு நடக்கும் என்று அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
திட்டமிட்டபடி இந்த தேர்வுகள் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. இதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தோ்வுகள் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் என்றும், பத்தாம் வகுப்பிற்கு 19ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொரோனா பரவல் காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.