கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் உடுப்பியில் இருக்கும் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணைந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமையன்று சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக 100 மாணவர்கள் காவி நிறமுள்ள சால்வையை அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர்.
ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதும் தங்கள் கல்லூரி முதல்வரிடம் ஹிஜாபோடு தங்களை வகுப்பில் அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர். மேலும் அந்த மாணவிகள், இரண்டு மாதங்களில் தேர்வு இருப்பதாகவும், தற்போது திடீரென்று ஏன் கல்லூரி, ஹிஜாப் அணிவதில் பிரச்னையை எழுப்புகிறது எனவும் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.