சமூக செயற்பாட்டாளர், 20 ஆண்டுகால பத்திரிக்கையாளர், மனித உரிமை ஆர்வலர், தமிழ் (இணைய) ஆர்வலர், ஆணையான் குளம் மாகிர், பெட்டிசன் மாகிர், பத்து ரூபாய் இயக்க மாகிர் எனப் பலவகையில் அழைக்கப்படும் முகம்மது மாகிர் அதிரை நகராட்சியின் முதல் தேர்தலில் தனது பெயரில் இரண்டும், தனது மனைவியின் பெயரில் இரண்டும் ஆக 4 வேட்புமனுக்களை OSK (ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பு) சார்பில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்து அசத்தியுள்ளார்.

நீண்ட காலம் அரசியலில் இருந்தவர்கள் கூட ஒரே ஒரு வார்டில் மட்டும் போட்டியிட்டுவிட்டு, கடைசி நேரத்தில் கையை பிசைந்து கொண்டிருக்கும் நிலையில், மரணமடைந்த தனது தாயாரை சென்னையில் அடக்கம் செய்துவிட்டு மறுநாள் திடீரென 4 மனுக்களையும் ஒரே நாளில் தயார் செய்து சுதி சுத்தமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து அவை நான்கும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.
நட்சத்திர வேட்பாளர்:
அல்டர்நேடிவ் சேர்மன் கேன்டிடட் என்று சொல்லப்படும், 4வது வார்டில் போட்டியிடும் திமுக நகரச்செயலாளரின் தம்பியின் மனைவியை எதிர்த்து அவரது மனைவியும், 15வது வார்டில் அதிமுக நகரச்செயலாளரை எதிர்த்து அவரும் களம் காண்கிறார். இதன் மூலம் அதிரையின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தொழில்:
மலேசிய, சிங்கப்பூர் நாடுகளில் மென்பொருள் வல்லுநராக பணியாற்றியுள்ளார். கடைசியாக சிங்கப்பூர் அரசின் மனிதவள அமைச்சகத்தின் திட்டத்தில் இரண்டாண்டுகள் பணியை முடித்து வந்த அவர் கொரோனா காலத்தில் வாட்சப்களில் பல்வேறு சமூக வலைதள குழுமங்களை துவக்கி வழிகாட்டி வருகிறார். அதிரை முறைப்பாடுகள் அதில் ஒன்றாகும்.
தனியார் நிறுவனம் ஒன்றில் ஐடி தொழில்நுட்ப மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். அதிரை வேட்பாளர்களிலேயே மேற்படிப்பு படித்த பட்டதாரி இவர் மட்டுமே.
சேவைகள்:
பத்து ரூபாய் இயக்கத்தின் அதிரை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் அவர் தகவல் அறியும் உரிமை சட்டம் (தஅஉ) தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு சொல்லித் தருகிறார். அவர் அதிரைப் பேரூராட்சியின் 5 ஆண்டுகள் வரவு-செலவு விவரங்களை தஅஉ சட்டத்தில் பெற்று மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளார்.
வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆணையான் குளத்தைப் பேருராட்சி குப்பைக்கிடங்காக பயன்படுத்தி வருவதையும், அவற்றை அப்புறப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர் என பலவகையில் மனுக்களை தொடர்ந்து இரண்டாண்டுகளாக அனுப்பி வருகிறார். தாம் தேர்தலில் நிற்பதே ஆணையான் குளத்திற்கு நீதி வேண்டும், குளம் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்கிறார். கடந்த மாதம் ஊருக்கு வந்த எஸ். எஸ். பழனிமாணிக்கம் எம்பியை சந்தித்து தூர்வார தொகுதி நிதி ஒதுக்கவும் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
ஆறு முறை ஜேசிபி கொண்டு குளத்தை தூர்த்த பேரூராட்சி ஊழியர்களை கண்டித்தும், ஆணையான் குளத்திற்கு காவல்துறை பாதுகாப்புக் கோரியும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளித்திருக்கிறார்.
திட்டங்கள்:
தாம் வெற்றி பெறும் பட்சத்தில் வார்டுகளுக்கு செய்யப்போகும் திட்டங்கள் பற்றியும், தொகுதி மக்கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான திட்டங்கள் எனப் பெரிய லிஸ்டை அடுக்குகிறார். அது இன்னும் ஒரிரு நாட்களில் நோட்டீசாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இவரது வெற்றிக்காக பெரிய டீம் அமைத்து OSK செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
படித்தவர், பண்பாளர், போடுங்கம்மா ஓட்டு என ஆட்டோ விளம்பரத்தை அவரது தொகுதி மக்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.