அதிரையில் நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை (17.02.2022) வியாழக்கிழமை ஓயவுள்ள நிலையில், சுயேட்சை உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் உச்சகட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 6வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமுமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் A.H.சௌதா, அவரது கணவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், மேலத்தெரு பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அவரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்க கோரியும் தகவல் வந்தது.
இதனையடுத்து 6வது வார்டில் வாக்கு சேகரிப்பில் இருந்து உடனே மேலத்தெருவிற்கு சென்ற தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா அதிரை நகர காவல்துறையை அழைத்து, மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்த சிவமேரி என்கிற மூதாட்டியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார்.
தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் சமுதாய பணிகளுக்கு எப்பொழுது அழைத்தாலும் தனது சுய தேவைகளை புறந்தள்ளிவிட்டு பொதுமக்களோடு களத்தில் நிற்கும் தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜாவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.